வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''பிற மாநில மக்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதுகின்றனர்,'' என, கவர்னர் ரவி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று, 'கோவா தினம்' கொண்டாடப்பட்டது. கோவா மாநில கலை நிகழ்ச்சிகளும், சுதந்திர போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா குறித்த நாடகமும் நடந்தன.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
இந்த நிகழ்ச்சி வாயிலாக கோவா மக்களின் மொழி, கலாசாரம், கலைகள் பற்றி அறிய முடிந்தது. கோவா மக்கள் பல மாநிலங்களிலும் வாழ்கின்றனர்; தமிழகத்திலும் உள்ளனர். சில தினங்களுக்கு முன், மஹாராஷ்டிரா மாநில தினம் இங்கு கொண்டாடப்பட்டது. இது தான் நம் இந்தியா.
கோவா மாநிலத்தில் உள்ள மக்கள் அன்பானவர்கள். சுற்றுலா பயணியரும் முதலில் தேர்வு செய்வது, கோவா மாநிலம் தான். ஆனால், இதற்கு முன் கோவா மாநிலம், பல இக்கட்டுகளை சந்தித்து உள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னரும் போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்தால், அங்கு இருந்த மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது, அந்த மாநிலம் துடிப்பான மக்களை கொண்டுள்ளது.
இந்தியா பல நாடுகளுக்கு வழிகாட்டியாக மாறி உள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பது தான், நாட்டுக்கு வலிமை தரும்.
இந்தியா என்பது ஆன்மிகம், கலாசாரம் நிறைந்த நாடு.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகத்துக்கு கல்விக்காகவும், தொழில் நடத்துவதற்காகவும் வருகின்றனர். பிற மாநில மக்கள், தமிழகத்தை தாய் மாநிலமாகவே கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால், இங்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கவர்னர் செயலர் ஆனந்த்ராவ் பாட்டீல், சம்யுக்தா கவ்டா சரஸ்வத் சபா தலைவர் தினேஷ் நாயக் உட்பட பலர் பங்கேற்றனர்.