மும்பை, வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, தற்போதே களப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள பா.ஜ., இன்று முதல் தொகுதிக்கு 1,000 வி.ஐ.பி.,க்கள் என, 31 நாட்களுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் பேரை சந்திக்க முடிவு செய்துள்ளது.
வரும் 2024 ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
இதில், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும் பா.ஜ., தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியும் ஒரு புறம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று முதல் ஜூன் 30 வரை, லோக்சபா தொகுதிக்கு, தலா 1,000 பேர் என, மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் முக்கியஸ்தர்களை சந்திக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மஹாராஷ்டிராவின் மும்பையில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் வினோத் தாவடே நேற்று கூறியதாவது:
பத்ம விருதுகள் அல்லது ஜனாதிபதி விருதுகள் வாங்கிய, 1,000 பேர் அடங்கிய பட்டியல், ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 30 வரை நடக்கும் இந்த ஒரு மாத பிரசார திட்டத்தில், 543 தொகுதிகளிலும், 5 லட்சத்து 50 ஆயிரம் பேரை, மத்திய அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் என, 227 பேர் சந்தித்து பேசுவர்.
அப்போது அவர்களிடம், பிரதமர் மோடி ஆட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை எடுத்து கூறுவோம். தொகுதியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விளக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.