வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அண்ணா பல்கலை கல்லுாரிகளில், பேராசிரியர்களின் கற்பித்தல் தரத்தை சோதிக்கும் நேர்காணலில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 'பெயில்' ஆகியுள்ளனர்.
அரசு கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு என்ற பெயரில், பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, அண்ணா பல்கலையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, அவர்களின் கல்வி தரம் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக, தேசிய உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யில் பணியாற்றும் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு, துறை வாரியாக அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், இரண்டு வாரங்களுக்கு முன், அண்ணா பல்கலையின் பதவி உயர்வு பட்டியலில் இருந்த ஆசிரியர்களுக்கு, கல்வித் தரம் குறித்து நேர்காணல் நடத்தினர்.
![]()
|
இதில், உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் என, 200 பேர் தனித்தனியாக நேர்காணலில் பங்கேற்றனர்.
அவர்களிடம் தங்கள் துறையில் பெற்ற அனுபவம், தற்போதைய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த அறிவு, கற்பித்தலில் தற்கால மாற்றங்கள் ஆகியன குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும், ஒவ்வொருவரும் தங்களின் கற்பித்தல் முறை குறித்து, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வாயிலாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியான நேர்காணல் முடிவுகளில், 30க்கும் மேற்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கு பணி மேம்பாட்டு திட்டத்தில் பதவி உயர்வு இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல்வி அடைந்தவர்களின் பலர், அண்ணா பல்கலையில், 'டாப்பர்' மாணவர்கள் படிக்கும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள்.
பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படிக்கும் துறை ஆசிரியர்களே, கற்பித்தல் தரத்தில் பின்தங்கியுள்ளது, பல்கலை நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சிறப்பு பயிற்சி
இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில், ''பணி மேம்பாட்டு நேர்காணலில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளோம்.
அவர்கள் தங்கள் கல்வி கற்பித்தல் திறனை உயர்த்தும் வகையில், நாளை ஆலோசனை கூட்டம் நடத்தி, கவுன்சிலிங் வழங்க உள்ளோம்,'' என்றார்.
இதற்கிடையில், 'இந்த நேர்காணல் நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் அருள் அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆசிரியர்கள் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளனரா என்ற அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால், நேர்காணல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான செயல் முறையில், பல ஆசிரியர்கள் பெயில் ஆக்கப்பட்டுள்ளனர்.
'இந்த விஷயத்தில் துறை தலைவர்கள் பாகுபாடு காட்டியுள்ளனர். எனவே, பணி மேம்பாட்டுக்கான நேர்காணலை மீண்டும் நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.