வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செங்கல்பட்டு: திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக மகேந்திரா பி ஜெயின், ராஜேஷ் பி ஜெயின் ஆகியோர் உள்ளனர்.
இந்நிறுவனத்தில் இருந்து, 'பாராசிட்டமால்' எனும் மருந்து, தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, 2006ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தாம்பரம் அரசு மருத்துவமனையில், 2006ம் ஆண்டு, அக்., 10ம் தேதி ஆய்வு செய்த, காஞ்சிபுரம் சரக மருந்துகள் ஆய்வாளர், தரம் குறைந்த 'பாராசிட்டமால்' மருந்து வினியோகம் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.
இது குறித்து, மருந்துகள் வழங்கிய நிறுவனத்தின் இயக்குனர்கள் மகேந்திரா பி ஜெயின், ராஜேஷ் பி ஜெயின் ஆகியோர் மீது, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன் விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
இறுதி விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மகேந்திரா பி ஜெயின், ராஜேஷ் பி ஜெயின் ஆகியோருக்கு, மூன்று வழக்குகளிலும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.