வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'பூமியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது' என, மனுஸ்மிருதி, திருக்குறளை சுட்டிக்காட்டி, தென் மண்டல தீர்ப்பாயம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
டில்லியை சேர்ந்த விதை தயாரிப்பு நிறுவனம், தர்பூசணி, பருத்தி, பாகற்காய் விதை உற்பத்தி ஆராய்ச்சிக்கு, தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
இந்தியாவில் எந்த உயிரினங்களையும், தாவரங்களையும் எந்த வகையிலாவது வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினால், வெளிநாடுகளுக்கு சென்றால், அதற்கு தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம், மாநில பல்லுயிர் பரவல் வாரிய அனுமதியை பெறுவது கட்டாயம்.
இல்லாவிடில், பல்லுயிர் பரவல் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம்.
![]()
|
இயற்கை வளங்கள் என்பது மனிதகுலத்திற்கு மட்டும் உரியது அல்ல. அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. இதை பண்டைய நீதி நூலான மனுஸ்மிருதி முதல் திருக்குறள் உள்ளிட்டவை வலியுறுத்துகின்றன.
தாவரங்கள், உயிரினங்கள் என பல்லுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறித்து, மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக, குடிமக்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அர்த்தசாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. 'உணவை பகிர்ந்து உண். அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்' என்கிறது திருக்குறள்.
மனிதர்களால் தாவரங்கள், விலங்குகள் என பல்லுயிர்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
ஏனெனில், அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பு சங்கிலி உள்ளது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.