வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை, 2019ல் மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்தது. இதற்கு பா.ஜ., மட்டுமல்லாது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன.
இதை எதிர்த்து, தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், நபர்களும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், '10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
![]()
|
இதனால், இந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள், கல்வி நிறுவனங்களில், 2019-ம் ஆண்டிலேயே 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனாலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை.
இங்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர், வெள்ளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு சமூகங்களில் பல உட்பிரிவுகள் என, 70-க்கும் அதிகமான ஜாதியினர் பயன் பெறுவர்.
இந்த சமுதாயங்களை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், சமீபத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகம் ஆகியோரை சந்தித்து, 'பிரதமர் மோடி கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த, பா.ஜ., சார்பில் போராட்டங்கள் நடத்தி, தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 10 சதவீத இட ஒதுக்கீட்டால் பயன் பெறும் சமூகங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த சமுதாயங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஜாதி சங்க தலைவர்களை சந்திக்கும் பொறுப்பை, பா.ஜ., மாநில பொதுச்செயலர் சீனிவாசனிடம், அண்ணாமலை ஒப்படைத்து உள்ளார்.
விரைவில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், போராட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மேலும், இந்த இட ஒதுக்கீட்டால் பயன் பெறும் சமூக தலைவர்கள் குழு அமைக்கப்பட்டு, முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.