வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பணி நிறைவு சான்று பெறப்பட்ட வீடுகளின் முதல் விற்பனையின் போது கட்டுமான மதிப்புக்கும் சேர்த்து முத்திரைத்தீர்வை செலுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமான நிலையில் வீடுகளை விற்பனை செய்யும் போது, யு.டி.எஸ்., எனப்படும் நிலத்தின் பிரிபடாத பங்கு கிரைய பத்திரம் வாயிலாக பதிவு செய்யப்படும்.
இதில் குறிப்பிடப்படும் நிலத்தின் மதிப்புக்கு, 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிக ஆர்வம்
இதில் கட்டடத்தின் மதிப்பு கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும்.
இதை பதிவு செய்ய ஒரு சதவீதம் முத்திரைத்தீர்வை, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் கட்டுமான ஒப்பந்த மதிப்பு அடிப்படையில் வீடு விற்பனைக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்படும்.
![]()
|
இந்நிலையில், சமீபகாலமாக பெரும்பாலான குடியிருப்பு திட்டங்களில் பணி நிறைவு சான்றுக்கு பின் வீடுகள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த வீடுகள் விற்பனையின் போது, யு.டி.எஸ்., கிரைய பத்திரம் மட்டுமே பதிவு செய்யப்படும் நிலையில் கட்டட மதிப்பு கணக்கில் வராததால் பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பணி நிறைவு சான்று பெற்ற குடியிருப்பு திட்டங்களில் வீடுகளை விற்கும் போது, கிரைய பத்திரத்தில் யு.டி.எஸ்., அளவுடன், கட்டடத்தின் மதிப்பையும் சேர்க்க வேண்டும்.
இந்த மொத்த மதிப்புக்கு, 7 சதவீத முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் செலவு
இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
பதிவுத்துறையின் புதிய முடிவால், வீட்டின் முதல் விற்பனை நிலையில், கட்டடத்தின் மதிப்புக்கும் முழு முத்திரைத்தீர்வை செலுத்தும் நிலை ஏற்படும்.
இது புதிதாக வீடு வாங்க வரும் மக்களுக்கு, 6 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.
யு.டி.எஸ்., கிரைய பத்திரத்தில் கட்டடத்தின் மதிப்பை சேர்ப்பதற்கு பதிலாக, வீடு ஒதுக்கீட்டு ஒப்பந்தம் என்ற புதிய வழிமுறையை ஏற்படுத்தி, அதற்கு ஒரு சதவீதம் முத்திரை தீர்வை, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கலாம்.
மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகளை தவிர்த்து, இது போன்ற புதிய வழிமுறையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -