வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பசும்பால் பாக்கெட் தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதால், சென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆவின் வாயிலாக கொழுப்பு சத்து அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் ஆகிய நிறங்களில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதனுடன், பசும் பால் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் இறங்கியுள்ளது.
ஊதா நிற பாக்கெட்டில், 500 மி.லி., பசும்பால், 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
![]()
|
பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டிற்கு மாற்றாக இதை பலரும் வாங்க துவங்கியுள்ளனர். ஆனால், பசும்பால் கொள்முதல் குறைவாக உள்ளது.
பல்வேறு கிராமங்களில் சிறுக, சிறுக சேகரிக்கப்பட்டு, மொத்தமாக சென்னையில் உள்ள சோழிங்கநல்லுார், அம்பத்துார், மாதவரம் பால் பண்ணைகளுக்கு தாமதமாக எடுத்துவரப்படுகிறது.
இதனால், பசும்பால் பாக்கெட் தயாரிப்பதற்கு கால தாமதம் ஆகிறது. இரவில், 9:00 மணிக்கு பிறகும், காலை, 8:00 மணிக்கு பிறகும், பால் பண்ணைகளில் இருந்து பால் பாக்கெட் ஏற்றிய வாகனங்கள் வெளியேற வேண்டும்.
மற்ற பால் பாக்கெட்டுகள் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், பசும்பால் பாக்கெட்களுக்காக ஒப்பந்த வாகனங்கள் காத்திருக்கின்றன.
இதனால், குறித்த நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பால் பாக்கெட்டுகளை பாலகங்களுக்கு 'சப்ளை' செய்ய முடியவில்லை.
இதனால், நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு ஆவின் நிர்வாகம் தீர்வு காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.