புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருவதோடு, அது தொடர்பாக கவலை கொள்கிறது. முதலிலேயே பிரச்னைக்கு தீர்வு கண்டு இருந்தால், இந்நிலை வந்திருக்காது. கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை அதிக கவலையை தருகிறது.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி செல்ல முயன்ற போது, கைது செய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்தில் இருந்து வெளியேற்றியதும் துயரை கொடுத்துள்ளது. இச்செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது.
மல்யுத்த சங்க தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தான் இப்பிரச்னைக்கு காரணமாக உள்ளது. இப்பிரச்னையின் துவக்கத்தில் இருந்து ஏற்கனவே செய்ததை போல உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும் அதோடு மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு குறித்து கூடுதல் தகவல்களை, உலக மல்யுத்த கூட்டமைப்பு கோரும். இதற்கு 45 நாட்கள் கெடு வழங்கப்படும். இதனை தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்யும். மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க செய்யும். இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் டில்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்படுகிறது. இது நினைவூட்டப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.