'ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்' நிறுவனம், அதன் 'சி.எல்., -
300' ஸ்கிராம்பிளர் பைக்கை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில்,
இந்தியாவில் விரைவில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த
பைக்கின் 286 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின், ஏற்கனவே இந்திய சந்தையில்
இருக்கும் 'சி.பி.ஆர்.,-300 ஆர்' பைக்கிற்கு பொருத்தப்பட்டு, வெற்றிகரமான
செயல்திறனை காட்டி நிரூபித்துள்ளது. சி.பி.ஆர்., பைக்கை விட 5 பி.எஸ்.,
பவர், இந்த பைக்கிற்கு குறைக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக சிறந்த மைலேஜை
எதிர்பார்க்கலாம்.
இந்த பைக்கின் சிறப்பம்சமே, அதன் 'ஹை மவுண்டட்
எக்ஸாஸ்ட்கள்' தான். ஏனெனில், பைக் பிரியர்களுக்கு வித்தியாசமான தனித்தன்மை
கொண்ட டிசைனை ஹோண்டா வழங்கியுள்ளது.
அத்துடன், 19 மற்றும் 17
அங்குல அலாய் சக்கரங்கள், டெலஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோ ஷாக்
சஸ்பென்ஷன்கள், டுயல் சேனல் ஏ.பி.எஸ்., பழுப்பு நிற சீட்டுகள், எல்.இ.டி.,
ஹெட் லைட்டுகள், வட்ட வடிவ பின்புற கண்ணாடிகள் உட்பட பல அம்சங்கள் இந்த
பைக்கில் உள்ளன.