தர்மபுரி: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்த வெளி நெல் குடோனில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக, ரைஸ் மில்களில் தணிக்கை நடந்தது.
தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புறம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் குடோன் உள்ளது. இங்கிருந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில்களுக்கு, நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு, அரிசியாக ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடோனில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக விஜிலன்ஸ் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் நடத்திய சோதனையில், நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, அவர்கள் சென்னையில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில ரைஸ் மில்களுக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளின் எடை மற்றும் ரைஸ் மில்களில் உள்ள நெல் மூட்டைகளின் எடை குறித்து, நுகர் பொருள் வாணிப கழகத்தினர் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தனது பங்களா பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த குடோனில் இருந்து 7000 டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பில்லை, இதுகுறித்து சென்னை இருந்து ஒரு குழு வரும். தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்தும் ஒரு குழு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில்களில் உள்ள இருப்பு நெல் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.