வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போதிய வசதிகள் இல்லாதது மற்றும் விதிகளை கடைபிடிக்காத காரணங்களுக்காக நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்த நிலையில், மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைகள் போன்றவற்றில், தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்து, அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது. அப்போது, மருத்துவமனை உட்கட்டமைப்பு, மருத்துவக் கல்லூரி வளாகம், பேராசிரியர்கள் பணியிடம், மாணவர்களின் வருகைப்பதிவு, ஆய்வக வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டை ஆய்வு செய்யப்படுகின்றன.
இவ்வசதிகள் அடிப்படையில் கூடுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்களும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய மருத்து வ ஆணைய அதிகாரிகள், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறியதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் இந்தாண்டுக்கு ரத்து செய்தது. அந்த வகையில் நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் போதிய வசதிகள் மற்றும் விதிகளை பின்பற்றாததால், நாடு முழுவதும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளது. தமிழகம், குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் இம்மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன.
இக்கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் பதிவில் குறைபாடு, ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. முறையாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடு குறித்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தில், அடுத்த 30 நாட்களில் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும். இது நிராகரிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் முறையிடலாம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.