புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால், பெருங்கடலில் உள்ள பல மீன் இனங்கள், துருவப்பகுதியை நோக்கி இடம்பெயர்வது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து மோசமான வறட்சி, கடல்நீர் மட்டம் உயர்வது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவை கடந்த நூற்றாண்டை விட வேகமாக அதிகரித்து வருகிறது. பிரிட்டனின் கிளாஸ்கோ பல்கலை ஆய்வாளர்கள், பெருங்கடல்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அனைத்து பெருங்கடல்களில் வாழும் 115 உயிரினங்கள் ,595 கடல் மீன் இனங்கள் பற்றிய தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். குளோபல் சேஞ்ச் பயாலஜி இதழில் வெளியாகி உள்ள இதன் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருங்கடல்களில் வெப்பநிலை அதிகரிப்பால், பல மீன் இனங்கள் கூட்டம், கூட்டமாக துருவ பகுதியை நோக்கி அல்லது குளிர்ந்த கடலில் அடி ஆழத்தை நோக்கி இடம்பெயர்ந்து வருகிறது. மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு, சுற்றியுள்ள நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் போன்ற முக்கியமான செயல்பாடுகளை பாதிக்கிறது.
மேலும், கடல் இனங்கள் பெரும்பாலும் மிகவும் குறைந்த வெப்பநிலை வரம்பைக் கொண்டுள்ளன. இதனால் தண்ணீரில் சிறிய வேறுபாடுகளைக் கூட சமாளிக்க முடியாது. புவி வெப்பமயமாதல், நிலத்தை விட கடலில் வாழும் உயிரினங்களுக்கு 7 மடங்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
ஆய்வு குழுவின் ஆசிரியர் கரோலின் டாம்ஸ் கூறுகையில், வேகமாக வெப்பமடைதல் நிகழும் பகுதிகளில் வாழும் மீன் இனங்கள், விரைவான இடபெயர்வை மேற்கொள்வதை நாங்கள் கவனித்தோம்.சில பிராந்தியங்களில் வெப்பமயமாதல் விகிதத்தை பொறுத்து, மீன் இனங்களை தங்களை மாற்றி கொள்ள வேண்டியுள்ளது. எனவே இடமாற்றம் செய்வது அவர்களின் சிறந்த சமாளிக்கும் உத்தியாக இருக்கலாம். அதே நேரத்தில், வணிக ரீதியாக மீன்பிடித்தல் போன்ற பிற காரணங்களால், இடபெயர்வு வேகம் குறைவாக இருப்பதை காண்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேராசிரியர் ஷான் கில்லன் கூறுகையில், 'குளிர்ந்த நீருக்கு இடம் பெயர்வது மீன் இனங்களை குறுகிய காலம் வாழ்வதற்கு மட்டுமே அனுமதிக்கும். அதே வேளையில், இந்த மாற்றங்களால் உணவு சங்கிலி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். மீன் இனங்களுடன் அவற்றுக்கு இரையாகும் உயிரினங்கள் இடம்பெயரவில்லை அல்லது புதிய இடத்தில் தொந்தரவாக மாறினால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.' என்றார்.
மேலும், பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அளவிடுகிறோம், குறிப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. தற்போதைய ஆய்வுகள் வணிக ரீதியாக உயிரினங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், எதிர்காலத்தில் பெருங்கடல்களை எவ்வாறு மாற்றும் என்பதற்கு தெற்கில் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.