வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. டி.கே.சிவகுமார் துணை முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முந்தைய பா.ஜ., அரசு முயற்சித்து வந்தது.
இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியும் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதனை அவர்களது தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 'மேகதாது அணை கட்டுவோம்' என தற்போது உறுதிப்பட கூறியுள்ளார்.
தண்ணீர் குறையக்கூடாது
இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: காவிரி பிரச்னையில் தமிழக காங்கிரசின் நிலையை ஏற்கனவே கூறியுள்ளோம். காவிரி தண்ணீர் குறைந்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுவர். கர்நாடகா அரசு, காவிரி தண்ணீரை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் குறையக்கூடாது; குறைந்தால் ஏற்கமாட்டோம். அதன்பிறகு இந்திய ஒருமைப்பாடு என பேசுவதில் பொருளில்லை.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையக்கூடிய எந்தவொரு செயலையும் அவர்கள் செய்தால் தமிழக காங்கிரஸ் ஏற்காது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்போடு இருப்போம். அதற்காக நாங்கள் போராடுவோம்; எந்த தியாகத்தையும் செய்வோம். தமிழக நலன் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு இடையூறு ஏற்பட்டால் உலக நீதிமன்றத்திற்கும் செல்ல தயார். இவ்வாறு அவர் கூறினார்.
