செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், 127 கிராமங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான செய்யூர் வட்டத்தில், ஆண்டுதோறும், 2,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகின்றனர்.
பல ஆண்டுகளாக, தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகள் இல்லாததால், இளைஞர்கள் வேலைக்காக சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், தொழிற்பேட்டை அமைக்க, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில், 99 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு, 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், 1,500 பேர் நேரடியாகவும், 4,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர். 103 தொழில் மனைகளுடன் அமையும் இந்த தொழிற்பேட்டையின் கட்டுமான பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கடந்த ஜூலை மாதம் துவங்கியது. கட்டுமானப் பணிகள் ஆறு மாதத்தில் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், பருவ மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.
விரைந்து முடித்து, தொழிற்பேட்டையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.