மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, சட்டமங்கலம் சாமியார் கேட் -- ஆப்பூர் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுத்கு வேலைக்கு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி, தினமும் சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரம், தெரு விளக்குகளுக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மின்கம்பங்களில் ஒன்றின் மேற்புறம், கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில் உடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பியின் தயவில் தொக்கிக்கொண்டு நிற்கிறது.
காற்று அடிக்கும்போது அசைந்து, இணைப்பில் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. லேசான காற்றடித்தால் கூட, கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின் வாரிய அதிகாரிகள், உடனடியாக மின் கம்பம் மற்றும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.