இந்தியாவில் தினம் தினம் புதிதாய் ஸ்டார்ட்அப்கள் முளைக்கின்றன. பிரச்னைகளுக்கு எளிய தீர்வைத் தரும் ஐடியாக்கள் வெற்றி பெற்று யுனிகார்னாக வளர்கின்றன. யுனிகார்ன் அந்தஸ்து என்பது 100 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டும் நிறுவனங்களை குறிப்பது. உங்களுக்கும் ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க வேண்டும் அல்லது அது எவ்வாறு உருவாகிறது என தெரிந்துகொள்ள வேண்டுமா... அதற்கான 10 படிநிலைகள் இங்கே
1. ஐடியா உருவாக்கம்: ஸ்டார்ட்அப் துவங்க முதல் படி சாத்தியமான தொழில் யோசனையை கொண்டு வர வேண்டும். சந்தையில் உள்ள பிரச்சனை அல்லது தேவையை ஒட்டி இந்த ஐடியா இருப்பது அவசியம். புத்தக விரும்பிகளுக்கு தேவையான நூல்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று வீடு தேடி டெலிவரி தந்தால் என்ன என்ற யோசனையில் உருவானது தான் அமேசான் நிறுவனம். இன்று அதன் மதிப்பு சுமார் 90 லட்சம் கோடி ரூபாய்.
2. சந்தை ஆராய்ச்சி: உங்கள் யோசனையை எடுபடுமா என்பதை அறிய, அச்சந்தை குறித்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். எந்த சந்தையை நீங்கள் இலக்காக வைக்கிறீர்களோ, அச்சந்தையில் நிலவும் போட்டி, யார் வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தையின் அளவு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த படிநிலை உங்கள் ஐடியாவைச் செம்மைப்படுத்த உதவும்.
3. பிசினஸ் பிளான்: ஐடியா மற்றும் சந்தை ஆராய்ச்சி முடித்தவுடன் விரிவான தொழில் திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்திட்டம் உங்களது தொழில் ஐடியா, இலக்கு வைத்துள்ள சந்தை, மார்க்கெட்டிங் உத்தி, வருவாய் மாடல் மற்றும் நிதி கணிப்புகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். நன்கு விளக்கப்பட்ட தொழில் திட்டம், முதலீட்டாளர்களை ஈர்க்கும்.
![]()
|
4. குறைந்தபட்ச தயாரிப்பை உருவாக்குங்கள்: இதனை Minimum Viable Project என்பார்கள். உங்கள் தொழில் ஐடியாவின் முக்கிய செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கான தயாரிப்பை உருவாக்க வேண்டும். பிறகு அதனை உள்வட்டத்தில் பயன்பாட்டுக்கு விட்டு கருத்துக்களைப் பெற்று மேம்படுத்தலாம்.
5. குழு உருவாக்கம்: இது முக்கியமான கட்டம். மேற்கூறிய நான்கு செயல்பாடுகள் மூலம் உங்களுக்கும், பிறருக்கும் உங்கள் ஐடியா மீது அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்திருக்கும். அந்த கருவை வளர்த்தெடுக்க தேவையான திறன்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அவர்கள் உங்கள் ஐடியாவுக்கு பலம் சேர்க்க வேண்டும்.
6. சிறிய நிதியுடன் ஆரம்பியுங்கள்: இதனை பூட்ஸ்ட்ராபிங் என்பார்கள். எடுத்தவுடன் உங்கள் ஐடியாவுக்கு வெளியிலிருந்து முதலீடுகள் வந்துவிடாது. ஓரிரு ஆண்டுகள் சொந்த பணத்தில் தான் நிர்வகிக்க வேண்டும். ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு மத்திய அரசும் கடனுதவி வழங்குகிறது. நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமும் பணம் திரட்டலாம்.
![]()
|
7. Pre-Seed நிதி திரட்டல்: ஸ்டார்ட்அப்கள் சீட் பண்டிங் முறை மூலம் நிதி பெற்று தொழிலை விரிவுப்படுத்துவார்கள். அதற்கு முந்தைய நிலை தான் ப்ரீ சீட் பண்டிங். இந்த நிலையில் பொதுவாக ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அல்லது ஆரம்ப கட்ட வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் மூலம் நிதி கிடைக்கும். ஸ்டார்ட்அப்களுக்கு ஆரம்ப செலவுகளை ஈடுகட்ட உதவும்.
8. Seed ஃபண்டிங்: இது அடுத்த கட்ட நிதி திரட்டல். நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க, குழுவை விரிவுபடுத்த, சந்தை அணுகலை விரைவுப்படுத்த பணம் திரட்டப்படும். பணத்திற்கு ஈடாக நிறுவனத்தின் பங்குகளை வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்.
9. சீரிஸ் ஏ, பி, சி பண்டிங்: இந்த தொடர் நிதி திரட்டல் சுற்றுகளில் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களிலிருந்து உள்ளூர் நிறுவனங்கள் வரை பங்கேற்பார்கள். அவர்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை அளவிட்டு நிதி வழங்குவார்கள். இந்த சுற்றுகளில் பல கோடி ரூபாய் கிடைக்கும். அதற்கு ஈடாக பங்குகளை கைமாற்ற வேண்டும். இந்த பணம் தொழிலை பரந்த அளவிலான வாடிக்கையாளரை நோக்கிச் செலுத்தவும், லாபத்தை நோக்கி நிறுவனத்தை முன்னகர்த்தவும் பயன்படும்.
10. பங்குச்சந்தையில் பட்டியலிடுவது: இன்று இந்தியாவிலேயே பார்க்கிறோம் பேடிஎம், சோமேட்டோ துவங்கி பல ஸ்டார்ட்அப்கள் பங்குச்சந்தைக்கு வந்துள்ளன. பங்குகளை பெரிய அளவில் விற்று ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் லாபத்தை எடுப்பார்கள். மேலும் நிறுவன வளர்ச்சிக்கும் நிதி திரட்டப்படும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் பொது நிறுவனமாக உருபெறும். மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் பங்குகளில் முதலீடு செய்வார்கள்.