என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாது என்று பயந்து, முன் எச்சரிக்கையாக சிறுதானியமான, தினை உணவை விரும்பிச் சாப்பிட்டார்' என்று, நக்கல் நையாண்டி செய்திருக்கிறார், விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம். அத்துடன், முருகனுக்கு இருக்கும் மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகத்தையும் கிளப்பி, பேரின்பம் அடைந்திருக்கிறார்.
ராமபிரானை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்துவதில் அலாதி இன்பம் கண்டவர்கள், இப்போது முருகனை பற்றி தரக்குறைவாக பேசுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.
நாத்திகச் செம்மலான கருணாநிதி, 'கற்சிலையாக இருக்கும் காளி மாதா, என்றைக்கு வாய் திறந்து பேசினாள்' என்று ஏகடீயம் பேசவில்லையா... மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், 'கொலஸ்ட்ரால்' பிரச்னைகள் உண்டு. பஞ்சாமிர்த பிரியரான முருகனுக்கு சர்க்கரை நோயெல்லாம் வராது.
நாத்திகம் பேசும் பன்னீர்செல்வத்திற்கு வேண்டுமானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு போன்றவை வரும். விலை மாதர்களின் வீடுகளுக்கு சென்றதால் குஷ்டரோகியான அருணகிரிநாதர், முருகனின் அருளால் குணம் அடைந்தார். மனிதனுக்கு வரும் வியாதிகளை குணப்படுத்த, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற நுால்கள் இருப்பது, இந்த மகானுபாவருக்கு தெரியாது போலும்.
குறவர்களின் கடவுளாக வணங்கப்படும் முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து தானே வழிபாடு செய்கின்றனர். முருகனுக்கு இரண்டு மனைவியர் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவருக்கான மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகம் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வந்திருப்பது தேவையில்லாதது.
நாத்திகச் செம்மல்கள் பலர், மனைவி என்ற பெயரில் ஒருத்தியையும், துணைவி என்ற பெயரில் இன்னொருத்தியையும் வைத்து, இல்லறம் நடத்துகின்றனர். மகளை போல வளர்த்த மணியம்மையை, தன் மனைவியாக்கி மகிழ்ந்த பெருமைக்குரியவர், ஈ.வெ.ராமசாமி.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில், நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகச் செம்மல்கள். அதனால் தான், சினிமா நடிகையான பானுமதி வீடு தேடிப் போனதை பெருமையாக நினைத்தார் அண்ணாதுரை. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்' என்று வியாக்கியானம் பேசியவர்களும் தி.மு.க.,வினரே.
முருகனை தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு, 'ஜோவியலாகச் சொன்னேன்' என்று சூப்பராக 'அந்தர்பல்டி' அடித்திருக்கிறார், அமைச்சர் பன்னீர்செல்வம். இது தான், நாத்திகச் செம்மல்களின் தனி ஸ்பெஷாலிட்டி. இவர்களை பற்றி ஓட்டளித்த மக்கள் புரிந்து கொண்டால் சரி!
வெண் கொற்றக்குடை பிடித்து வரவேற்பார்! டி.ஆர்.ஷியாம் சுந்தர், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------------------------------------------------------------- கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், 'திராவிட நிலப்பரப்பில் இருந்து, பா.ஜ., முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது' என்றார். ஆனால், அந்த திராவிட நிலப்பரப்பில், ௨௦௧௯ லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு, ௨௯ எம்.பி.,க்களை பெற்றது. ஆனால், பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட் ட, தி.மு.க., வுக்கு, ௨௪ எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர்.
கர்நாடகாவில் பா.ஜ., வுக்கு ஏற்பட்டது தோல்வி தான்;
ஆனால், படுதோல்வி அல்ல. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கருத்து
கூறும் ஸ்டாலின், தி.மு.க.,வின் பழைய தேர்தல் வரலாறுகளை, சற்று உற்றுப்
பார்க்க வேண்டும்...
தமிழகத்தில், எம்.ஜி. ஆர்., மறைவிற்கு பின்,
1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை
பிடித்தது. ஆனால், அதற்கடுத்த 10 மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில்,
தி.மு.க., ஆட்சி மீதான வெறுப்பால் மக்கள் ஓட்டளிக்கவில்லை; அப்போது, ஒரு
தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை.
அப்போது, தமிழக நிலப்பரப்பில் இருந்து, தி.மு.க.,வை வங்கக் கடலில் வீசி எறிந்து விட்டனர் மக்கள்.
கர்நாடகாவில்,
பா.ஜ., தற்போது கவுரவமான தோல்வி கண்டு எதிர்க்கட்சியாகி உள்ளது. ஆனால்,
தமிழகத்தில், 1991 மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வால்
எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை; மூன்றாவது இடத்திற்கு
தள்ளப்பட்டது.
அதுமட்டுமின்றி, 1989, 1991 மற்றும் 2014 லோக்சபா தேர்தல்களிலும், தி.மு.க.,வுக்கு கிடைத்தது பூஜ்ஜியமே.
அதிலும்,
2014ல் குமரி தொகுதியில், பா.ஜ.,விடம் தி.மு.க., டிபாசிட் இழந்தது.
இவ்வளவு ஏன்... தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரையே தேர்தலில் தோற்றவர் தான்;
அதுவும், அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில்!
தேசியக் கட்சியான
பா.ஜ., கர்நாடகாவில் தோற்றது, ஒரு தற்காலிக பின்னடைவே. அடுத்த ஆண்டு
நடக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெறும்; மீண்டும்
பிரதமராவார் மோடி. அப்போது, அவரை வெண் கொற்றக்குடை பிடித்து, முதல்வர்
ஸ்டாலின் வரவேற்கும் காட்சியை, தமிழகம் பார்க்கத் தான் போகிறது.
சாலை வரியை
ரத்து செய்யுங்க!
ஏ.அஸ்மாபாக்
அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரு
சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் புதிதாக வாங்கும் போது, சாலை வரி
என, அரசுக்கு பல ஆயிரம் ரூபாயை கட்டிய பிறகே, வாகன பதிவு எண் தரப்படுகிறது.
இப்படி சாலை வரி கட்டிய வாகனம், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வர,
சட்டப்பூர்வ அனுமதி உண்டு என்ற நிலையில், 'டோல்கேட்' எனப்படும்,
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளிலும் நிறுவி, தினமும்
கோடிக்கணக்கில் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்வது நியாயமற்றது.
மக்களை
சுரண்டும் இந்தக் கட்டணக் கொள்ளை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் இருந்தது
என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அதாவது, இந்தக் கட்டணக் கொள்ளையின்
சிருஷ்டி கர்த்தாவே காங்கிரஸ் ஆட்சி தான்.
'தவறுகளை திருத்தவே,
நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்' என வாய் கிழிய பேசும் மத்திய பா.ஜ., அரசு,
இந்தப் பிரச்னையில் உள்ள யதார்த்தத்தை உணர்ந்து, சுங்க கட்டண வசூலை
கைவிடலாமே... அதை ஏன் செய்ய முன்வரவில்லை?
அதற்கு காரணம், ஏதோ ஒரு
வகையில், அரசு கஜானா நிரம்பினால் சரி என்ற எண்ணமே. அநியாயமான முறையில்
வசூலிக்கப்படும் இந்த சுங்க கட்டண வசூலை ரத்து செய்வதுடன், நாட்டின் பல
பகுதிகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளையும் மூட, மத்திய அரசு உத்தரவிட
வேண்டும்.
அப்படி செய்ய முடியா விட்டால், புதிதாக வாகனங்கள்
வாங்கும் போது, சாலை வரி விதிப்பதையாவது ரத்து செய்ய வேண்டும். இதுவே,
நேர்மையான அரசு செய்யும் காரியமாக இருக்கும். சாலை வரியை ரத்து செய்ய
மத்திய அரசு முன்வருமா அல்லது கட்டணக் கொள்ளை தொடருமா?