''வேலைக்கு வராத வங்க பெயரையும் கணக்குல காட்டி, பணத்தை, 'ஆட்டைய' போடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில, 100 நாள் வேலை திட்டத்துல, பணிக்கு வராதவங்க பெயரை சேர்த்து கணக்கு காட்டி, சில வார்டு கவுன்சிலர்கள், 'கல்லா' கட்டுதாவ...
''இது சம்பந்தமா மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வரை புகார் சொல்லியும், யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதனால, தெம்பான கவுன்சிலர்கள், இப்ப தேயிலை தோட்டத்துல வேலை செய்யுற பெண்கள் பெயருலயும் போலி கணக்கு காட்டி, வருமானத்தை, 'டபுள்' ஆகிட்டாவ வே...
''இந்த மோசடி குறித்து, முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் போயிட்டு... ஊராட்சி முழுக்க இந்த நிலை தொடர்வதால், விரைவில் விசாரணை இருக்குதாம் வே...'' என்றார் அண்ணாச்சி.
''கூலித் தொழிலாளிகளை கூட விடாம, 'கேஸ்' போட்டு, போலீஸ்காரங்க காசு அள்ளுறாங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''அவாளையும் விடலையா ஓய்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''ஆமாங்க... சென்னை ஆவடிக்கு உட்பட்ட கட்டூர் பகுதியைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்குதுங்க... இந்தப் பகுதி மக்கள், முழுக்க முழுக்க விவசாயத்தையும், கூலித்தொழிலையும் மட்டுமே நம்பி வாழுறாங்க...
''இவங்க இரு சக்கர வாகனத்துல வேலைக்கு போகும் போது மடக்கி பிடிச்சு, ஏதாவது கேஸ் போட்டு, 'டிராபிக்' போலீஸ்காரங்க காசு பிடுங்குறாங்க... காசு இல்லையின்னா, 'நோட்டீசை' கையில திணிச்சு அனுப்பிடுறாங்க...
''அதுமட்டுமில்லாம, பழவேற்காட்டுல இருந்து, சென்னை புறநகர் மார்க்கெட்டுகளுக்கு மீன், இறால் ஏத்திட்டு போகிற வாகனங்களை மடக்கி, 'சீட் பெல்ட் எங்கே... 'யூனிபார்ம்' ஏன் போடலை'ன்னு ஏதாவது காரணம் சொல்லி, வசூலிக்கிறாங்க...
''தினக்கூலியை நம்பி பொழைக்கிற இந்த ஜனங்க, போலீஸ்காரங்க அடாவடியால ரொம்பவே நொந்து போயிருக்காங்க...''என்றார் அந்தோணிசாமி.
''மூணு மாசம் பொறுத்துக்க சொல்லி இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தொழில்த்துறையை பிடுங்கிட்டு, நிதித் துறையை கொடுத்தாளோல்லியோ... அதனால சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிக்கு ஏக வருத்தமாம் ஓய்... 'இந்த துறையை வச்சிண்டு, கட்சிக்காராளுக்கு என்னத்தை செய்யறது, கட்சிக்கும் பைசா பிரயோஜனம் இல்ல' என்று, அவர் சத்தமாவே புலம்பியிருக்கார்...
''அதனால, கனிம வளத் துறையையும், அவருக்கு கூடுதலாக தர்றதாக, முதல்வர் தரப்புல, 'ப்ராமிஸ்' பண்ணிட்டா... உடனே, கனிம வளத்துறையை கவனிக்கற சீனியர் மந்திரி கதிகலங்கி போயிட்டார்... 'பிரச்னைக்குரியவாளை மாத்தும் போது, என் துறையையும் மாத்தினா, என் மானம் கப்பல் ஏறிடாதா... ஒரு மூணு மாசம் பொறுத்து மாத்தப்டாதா'ன்னு, அவர், 'ஸ்டைல்'லயே கண் கலங்க கதறினாராம் ஓய்...
''அதனால, 'மூணு மாசம் கழிச்சு கனிம வளத்துறை உம் வசம் வந்து சேரும்'னு, சம்பந்தப்பட்டவருக்கு மேலிடம் வாக்குறுதி கொடுத்திருக்காம்... ''இதை மோப்பம் பிடிச்ச சில தென் மாவட்ட புள்ளிகள், தமிழகம் முழுக்க இருக்கற குவாரிகளை இப்பவே கணக்கெடுக்க துவங்கிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.