காஞ்சிபுரம் மாவட்டம், துாசி கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் வசந்தா: தலைமுறை தலைமுறையாக, நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். என் அப்பா கண்ணன், நிறைய பேருக்கு குருவாக இருந்து, நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார்.
குடும்பச் சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்புடன், என் படிப்பை நிறுத்தி விட்டனர். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில், 10 வயதில், 'எனக்கும் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுங்கள்' என, அப்பாவிடம் கேட்டேன். 'பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு' என்று மறுத்து விட்டார்.
என் ஆசையை அறிந்த என் பாட்டி, அப்பாவின் சிஷ்யர் கோவிந்தராஜிடம், நாதஸ்வரம் கற்றுக் கொள்ள சேர்த்து விட்டார். குரு வீட்டிலேயே, 10 ஆண்டு கள் தங்கி, வீட்டு வேலைகள் செய்து தான், நாதஸ்வரம் வாசிக்க கற்றேன்.
என் குருவிடம் நாதஸ்வரம் கற்றவர்களில், நான் மட்டுமே பெண். துவக்கத்தில் எல்லாரும் வித்தியாசமாக பார்த்தனர்; ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பார்வையே, எனக்குப் பெருமையாக மாறியது. பயிற்சி முடிந்து நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிக்கத் துவங்கினேன்.
அப்பாவுடன் சேர்ந்தும் வாசிக்கத் துவங்கினேன். நான் அவருடன் சேர்ந்து வாசிக்கும் போது, சந்தோஷமும், பெருமையும், அவரின் கண்களில் தெரியும். 23 வயதில், நாதஸ்வர கலைஞரான ஞானப்பிரகாசத்தை திருமணம் செய்து வைத்தனர்.
அவருடன் சேர்ந்தும் கச்சேரிகள் செய்யத் துவங்கினேன்.
பொதுவாக, பெரும்பாலான வேலைகளில், ஆண்களை விட பெண்களுக்கு கூலி குறைவாக இருக்கும். நாதஸ்வர கலையைப் பொறுத்தவரை, பெண் கலைஞர்களுக்கு தான் சம்பளம் அதிகம்.
நானும், என் வீட்டுக்காரரும் போனால், நான் தான் அதிக சம்பளம் வாங்குவேன்; அதை, அவரும் பெருமையாக நினைப்பார்.
வாழ்க்கை நன்றாக போயிட்டு இருந்த நேரம்... திடீரென கணவர் தவறிவிட்டார். அப்போது, என் மகளுக்கு, 14 வயது; மகனுக்கு, 11 வயது.
நாதஸ்வரம் வாசித்து தான் இரண்டு பேரையும் படிக்க வைத்தேன். இத்தனை ஆண்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசித்திருக்கிறேன்.
இப்போது நாதஸ்வரம் உட்பட, எல்லா கலைகளுக்கும், மக்களிடம் மவுசு குறைந்து விட்டது. எங்களைக் கொண்டாடணும் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எங்களின் அழுகை, சந்தோஷம், நம்பிக்கை, விடியல் எல்லாமே, நாங்க உயிருக்கு உயிராக நேசிக்கும், இந்தக் கலை தான். மக்கள் மனது வைத்தால், தலைமுறைகள் தாண்டியும் நம் கலைகள் வாழும்.