சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஒன்பது நாட்கள் சுற்றுப்பயணத்தில், 1,258.90 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க, 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜன., 10, 11ம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்றார். அவரது மனைவி துர்கா, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் சென்றனர். முன்னதாக, தொழில் துறை அமைச்சர் ராஜா, சிங்கப்பூர் சென்று, முதல்வர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரை சேர்ந்த எச்.ஐ.பி., இன்டர்நேஷனல் நிறுவனம், 312 கோடி ரூபாய் முதலீட்டில், 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மின்னணு பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இரண்டு நாட்கள் சிங்கப்பூர் பயணத்தை முடித்து, முதல்வர் ஜப்பான் சென்றார். அங்கு 'டைசல் சேப்டி சிஸ்டம்ஸ்' நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள, 'ஏர்பேக் இன்பிளேட்டர்' தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இது தவிர, ஆறு ஜப்பான் நிறுவனங்களுடன், 818.90 கோடி ரூபாய் முதலீட்டுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அந்நாட்டின் முன்னணி நிறுவனமான 'ஓம்ரான் ஹெல்த்கேர்' நிறுவனம், 128 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இரு நாடுகளில், மொத்தம் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஒன்பது நாள் பயணத்தை முடித்து, நேற்று இரவு, முதல்வர் சென்னை திரும்பினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், துபாய் மற்றும் அபுதாபி சென்றிருந்தபோது, முதல்வர் முன்னிலையில் ஆறு நிறுவனங்கள், 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க ஒப்பந்தங்கள் செய்தன.
அ.தி.மு.க., ஆட்சியில், பழனிசாமி லண்டன், துபாய் சென்றபோது, 41 நிறுவனங்களுடன், 8,838 கோடி ரூபாய்க்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர், ஜப்பானில் இருந்து, 1,258.90 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டும் கிடைத்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'பொருளாதார மந்தநிலை காரணமாக, எதிர்பார்த்த முதலீடுகள்
வரவில்லை. பல நிறுவனங்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்துள்ளன' என்றனர். - நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement