புதுடில்லி,
ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது முதல் இதுவரை, 61 ஆயிரத்து 501 கோடி ரூபாய் மதிப்புள்ள சிகிச்சைகள், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' என்ற திட்டத்தை 2018 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது.
இதன் வாயிலாக, பல்வேறு சிகிச்சைகளை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பெறலாம். இத்திட்டம், புதுடில்லி, ஒடிசா, மேற்கு வங்கம் தவிர, நாடு முழுதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டு கள் நிறைவடைந்துஉள்ளன.
இதையொட்டி, தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
உலகளாவிய தொலைநோக்கு பார்வையுடன் துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், தற்போது ஐந்து ஆண்டு களை நிறைவு செய்துஉள்ளது.
இதன் வாயிலாக, நாடு முழுதும் கோடிக் கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்துஉள்ளனர். 2022 - 23ம் ஆண்டில் மட்டும், இத்திட்டத்தின் கீழ், 1.65 கோடி பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில், ஐந்து கோடி பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மதிப்பு, 61 ஆயிரத்து 501 கோடி ரூபாய். புற்றுநோய், எலும்பியல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு அதிக அளவில் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.