புதுடில்லி வழக்கின் சாட்சிகளுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக, 'சம்மன்' அனுப்பியதற்காக, போலீஸ் அதிகாரிகளை புதுடில்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன், உரிய நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கு ஒன்று, புதுடில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
![]()
|
அப்போது, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சாட்சி நேரில் ஆஜராகவில்லை.
இது குறித்து நீதிபதி விசாரித்தபோது, அந்த சாட்சிக்கு, வாட்ஸாப் வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மொபைல்போனில் அழைத்தபோதும் அந்த சாட்சி, அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது:
'வழக்கின் சாட்சிகளுக்கு, வாட்ஸாப் வாயிலாக சம்மன் அனுப்பக் கூடாது' என, புதுடில்லி போலீஸ், துணை கமிஷனர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார். ஆனால், அதை போலீசார் பின்பற்றுவதில்லை.
எந்த ஒரு சாட்சியையும் போலீசார் நேரில் சந்தித்து சம்மன் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று முறை இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஆனால், நேரில் செல்லாமல், வாட்ஸாப் வாயிலாக செய்தி அனுப்பி, போலீசார் மெத்தனமாக இருந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, துணை கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement