திருப்பூர்: தாராபுரத்தில், இறந்தவர் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து, பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தொடர்பாக ஓய்வு பெற்ற மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் உட்பட, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பொன்னிவாடியை சேர்ந்தவர் சிவக்குமார், 40. இவரும், இவரின் தந்தை சோமசுந்தரமும், தாராபுரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலத்தை, 2010ல், ஒரு காற்றாலைக்காக, (சிவா ரெனியூவபில் பவர் அண்ட் எனர்ஜி லிமிடெட்) 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கினர்.
கடந்த, 2011ல், இந்த இடத்துக்கான 'பவர் ஆப் அட்டர்னி'யை தாராபுரத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு எழுதி கொடுத்தனர். அதன்பின், 2015ல், சோமசுந்தரம் விபத்தில் இறந்தார். தந்தை இறப்புக்கு பின், சொத்துகளை மகன் சிவக்குமார் பராமரித்து வந்தார்.
இந்தாண்டு, ஜன., 15ம் தேதி சிவக்குமாரை அணுகிய செந்தில்குமார், இடத்தை வாங்குவதாக தெரிவித்தார். ஆனால், சிவக்குமார் மறுத்து விட்டார். இதனால், போலி ஆவணங்கள் மூலம், பிப்., 13ம் தேதி கிரயம் செய்து, இடத்தை செந்தில்குமார் அபகரித்தது தெரியவந்தது.
இது குறித்த, சிவக்குமார் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், இறந்த சோமசுந்தரம் உயிரோடு இருப்பதாக, தாராபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் திருமலைசாமியிடம் சான்று பெற்று, பாலசுப்ரமணியம் என்பவரின் பெயரில் (திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்) கிரயம் செய்து அபகரித்தது தெரிந்தது.
இவ்வாறு, போலி ஆணவங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக, டாக்டர் திருமலைசாமி, செந்தில்குமார் ஆகியோர் மீது, மே 20ம் தேதி வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தாராபுரத்தில், நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மூத்த அமைச்சரின் தலையீடு இருப்பதாலும், ஆளும்கட்சியினர் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் பெயருக்கு மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர்.