சென்னை:'இருக்கை வசதியுடன் தயாராகும் வந்தே பாரத் ரயிலில் இனி, எட்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகும் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு உள்ளது. தற்போது 16 பெட்டிகள் மற்றும் எட்டு பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகை ரயில்களில், இருக்கை வசதி மட்டுமே உள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் 'இன்டர்சிட்டி ரயில்களாக' இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இருக்கை வசதியுடன் தயாராகும் வந்தே பாரத் ரயிலை, இனி எட்டு பெட்டிகளுடன் மட்டுமே தயாரிக்க வேண்டுமென ரயில்வே வாரியம், ஐ.சி.எப்.,புக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.சி.எப்., ஆலையில் இதுவரையில் , 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலும், 16 பெட்டிகளாக இருக்கின்றன. 19வது வந்தே பாரத் ரயில் மும்பை - கோவா இடையே வரும் 3ல் துவங்கப்பட உள்ளது; பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
இதற்கிடையே, தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில், இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் வகை ரயிலை, இனி எட்டு பெட்டிகளுடன் மட்டுமே தயாரிக்க வேண்டுமென வாரியம் உத்தரவிட்டுள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.