கீழக்கரை, மநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. 849ம் ஆண்டிற்கான உரூஸ் எனும் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவிற்காக மே 21ல் மவுலீதுடன் (புகழ்மாலை) விழா துவங்கியது.
தர்காவின் முன்புறமுள்ள கொடியேற்றும் இடத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு 85 அடி உயர அடிமரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு ஏர்வாடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க கொடி ஊர்வலம் வந்தது. பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ணக் கொடி யானை மீது கொண்டு வரப்பட்டது. முன்புறம் நாட்டியக்குதிரைகள் நடனமாடியவாறு வந்தன.
மூன்று முறை தர்காவை வலம் வந்தனர்.
பின்னர் இரவு 7:15 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது.
ஜூன் 12 மாலையில் சந்தனக்கூடு விழா துவங்கி ஜூன் 13 பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகம்மது பாகீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா , ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.