சென்னை: ''சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழகத்தின் அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு துாண்டுகோலாக அமையும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சிங்கப்பூர், ஜப்பான் அரசு முறை பயணத்தை முடித்து, நேற்று இரவு 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில், முதல்வர் அளித்த பேட்டி:
சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
தமிழகத்துக்கும் ஜப்பானுக்கும் பொருளாதார ரீதியாக, தொழில் ரீதியாக நல்லுறவு ஏற்படும் வகையில், இந்த பயணம் அமைந்தது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட, மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல்கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவற்றை ஜப்பான் பங்களிப்புடன் செயல்படுத்தினோம்.
உற்பத்தி துறையில் முன்னோடியாக ஜப்பான் திகழ்கிறது.
பேச்சு
ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்க வேண்டும் என்பது தி.மு.க., அரசின் குறிக்கோள். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு,ஜப்பான் சென்று ஆரம்ப கட்ட பேச்சு நடத்தினார்.
குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டோம். அமைச்சர்கள், அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு, பல நிறுவனங்களுடன் பேசினர்.
முன்னதாக, 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதனக் கருவிகள் உற்பத்தி செய்யும் மிட்சுபிசி நிறுவனத்துடன், சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது, பல நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை சேர்த்து, மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் வழியே நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது, தமிழகத்தின் அடுத்தக்கட்ட தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு, இந்த தொழிற்சாலைகள் துாண்டுகோலாக அமையும். மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள, சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் முனைப்போடு உள்ளன.
மேலும் முயற்சி செய்து, அந்த தொழில் முதலீடுகளை ஈர்க்கும்படி, தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
சென்னையில், ஜன.,10,11ம் தேதி நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரும்படி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். பல தொழில் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் விமர்சனம் குறித்து பேசுகையில், ''பழனிசாமி தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பர் என நினைக்கிறார்.
''நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவருக்கு பதில் அளித்துள்ளார்,'' என்றார்.
அச்சுறுத்தல்
அமைச்சர் செந்தில்பாலாஜி உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் நடத்தியசோதனை குறித்த கேள்விக்கு ஸ்டாலின் கூறியதாவது:
ரெய்டு மூலம் பழிவாங்க, பயமுறுத்த நினைக்கின்றனர். மத்திய பா.ஜ., அரசு வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை வாயிலாக பழிவாங்குவது, அச்சுறுத்துவது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
தற்போது இங்கும் துவங்கி உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது.
தி.மு.க.,வும் இதில் ஈடுபட்டுள்ளது. புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று என்னை சந்திக்கின்றனர்.
பீஹாரில் வரும் 12ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கவுள்ளது. அதற்கு தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதால் தேதியை மாற்றும்படி கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.