வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாது என்று பயந்து, முன் எச்சரிக்கையாக சிறுதானியமான, தினை உணவை விரும்பிச் சாப்பிட்டார்' என்று, நக்கல் நையாண்டி செய்திருக்கிறார், விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம். அத்துடன், முருகனுக்கு இருக்கும் மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகத்தையும் கிளப்பி, பேரின்பம் அடைந்திருக்கிறார்.
ராமபிரானை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்துவதில் அலாதி இன்பம் கண்டவர்கள், இப்போது முருகனை பற்றி தரக்குறைவாக பேசுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.
![]()
|
நாத்திகச் செம்மலான கருணாநிதி, 'கற்சிலையாக இருக்கும் காளி மாதா, என்றைக்கு வாய் திறந்து பேசினாள்' என்று ஏகடீயம் பேசவில்லையா... மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், 'கொலஸ்ட்ரால்' பிரச்னைகள் உண்டு. பஞ்சாமிர்த பிரியரான முருகனுக்கு சர்க்கரை நோயெல்லாம் வராது.
நாத்திகம் பேசும் பன்னீர்செல்வத்திற்கு வேண்டுமானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு போன்றவை வரும். விலை மாதர்களின் வீடுகளுக்கு சென்றதால் குஷ்டரோகியான அருணகிரிநாதர், முருகனின் அருளால் குணம் அடைந்தார். மனிதனுக்கு வரும் வியாதிகளை குணப்படுத்த, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற நுால்கள் இருப்பது, இந்த மகானுபாவருக்கு தெரியாது போலும்.
குறவர்களின் கடவுளாக வணங்கப்படும் முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து தானே வழிபாடு செய்கின்றனர். முருகனுக்கு இரண்டு மனைவியர் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவருக்கான மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகம் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வந்திருப்பது தேவையில்லாதது.
நாத்திகச் செம்மல்கள் பலர், மனைவி என்ற பெயரில் ஒருத்தியையும், துணைவி என்ற பெயரில் இன்னொருத்தியையும் வைத்து, இல்லறம் நடத்துகின்றனர். மகளை போல வளர்த்த மணியம்மையை, தன் மனைவியாக்கி மகிழ்ந்த பெருமைக்குரியவர், ஈ.வெ.ராமசாமி.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில், நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகச் செம்மல்கள். அதனால் தான், சினிமா நடிகையான பானுமதி வீடு தேடிப் போனதை பெருமையாக நினைத்தார் அண்ணாதுரை. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்' என்று வியாக்கியானம் பேசியவர்களும் தி.மு.க.,வினரே.
முருகனை தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு, 'ஜோவியலாகச் சொன்னேன்' என்று சூப்பராக 'அந்தர்பல்டி' அடித்திருக்கிறார், அமைச்சர் பன்னீர்செல்வம். இது தான், நாத்திகச் செம்மல்களின் தனி ஸ்பெஷாலிட்டி. இவர்களை பற்றி ஓட்டளித்த மக்கள் புரிந்து கொண்டால் சரி!