வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜன., 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வந்தது. தற்போது ஜன., 1; ஏப்., 1; ஜூலை 1; அக்., 1 ஆகிய நாட்களை, தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, தொடர்ந்து இளைஞர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
அதன்படி, இனி ஒவ்வொரு காலாண்டிலும், வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 18 வயது பூர்த்தியான இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் வழங்கலாம். கடந்த ஏப்., 1ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, கடந்த ஜன., 5 முதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி நேற்று வரை, ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 64 பேர் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. முகவரி மாற்ற விண்ணப்பித்த, 51,295 வாக்காளர்களின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு போன்ற காரணங்களுக்காக, 9 லட்சத்து 11 ஆயிரத்து 820 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 2.60 லட்சம் வாக்காளர்களின் பதிவுகளில், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, தமிழகத்தில், 3.01 கோடி ஆண்கள்; 3.11 கோடி பெண்கள்; 7,979 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில், 6.20 கோடி வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது, வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் உள்ள சட்டசபை தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் உள்ளது.
இங்கு 3.26 லட்சம் ஆண்கள்; 3.24 லட்சம் பெண்கள்; 111 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.51 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில், 2.26 லட்சம் ஆண்கள்; 2.28 லட்சம் பெண்கள்; 115 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 4.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தபட்சமாக, சென்னை துறைமுகம் தொகுதியில், 87,924 ஆண்கள்; 81,309 பெண்கள்; 59 மூன்றாம் பாலினத்தவர் என, ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 292 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதியில், 83 ஆயிரத்து 669 ஆண்கள்; 86 ஆயிரத்து 79 பெண்கள்; இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில், 3,400 வெளிநாடு வாழ் வாக்காளர்கள்; 4.34 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். வயது 18 முதல் 19க்கு உட்பட்ட வாக்காளர்கள், 8 லட்சத்து 80 ஆயிரத்து 612 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலை, elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை, தற்போது செயல்பாட்டில் உள்ளது. எனவே, கடந்த ஏப்., 1ல் 18 வயது நிரம்பியவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில், படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம்.மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, 'Voter Helpline' என்ற 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்து, அதன் வழியாக விண்ணப்பிக்கலாம். புகைப்படம் இல்லாத வாக்காளர் பட்டியல் நகலை, வாக்காளர் பதிவு அலுவலரிடம், ஒரு சட்டசபை தொகுதிக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 1950, 1800 42521950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.***