வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ''அமைச்சர் உதயநிதி பவுண்டேஷனும், நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரியும் ஒன்று தான்,'' என, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட, 1,000 கோடி ரூபாய் துபாய் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து மதுரையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டு பேசினார்.
மதுரையில் மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை மற்றும் பூத் கமிட்டி தலைவர்கள் தாமரை சங்கமம் விழா பொதுக்கூட்டம் பா.ஜ., நகர் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது.
இதில், அண்ணாமலை பேசியதாவது:
ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏழை மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழல் நாடு என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.
![]()
|
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் வைக்கப்பட்ட தமிழகத்தின் செங்கோல் நம் பெருமை. 1947ல் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை நேருவின், 'வாக்கிங் ஸ்டிக்' ஆக மாற்றி அலகாபாத்தில் வைத்து விட்டனர்.
அதை பார்லிமென்டில் வைத்தார் மோடி. புதிய பார்லிமென்டில் முதல் மொழியாக தமிழை ஒலிக்க செய்தார். தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப் போகிறது என்பது உறுதி. தி.மு.க., ஆட்சிக்கும், அறத்திற்கும் சம்பந்தமும் இல்லை.
இரண்டு ஆண்டு தி.மு.க., ஆட்சி குறித்து, 'தி.மு.க., பைல் 1'ஐ பா.ஜ., வெளியிட்டது. நாங்கள் சொன்ன பின், 'முதல்வர் குடும்பத்தினர், 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்' என, மதுரை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆடியோவை வெளியிட்டோம்.
அந்த அமைச்சர் துறையை மாற்றி, முதல்வர் குடும்பத்தை விமர்சித்தால் என்ன நடக்கும் என, அவருக்கு அறிவாலயம் பாடம் புகட்டியுள்ளது.
ஒரே முகவரியில் உதயநிதி பெயரில், 'உதயநிதி பவுண்டேஷன்' உள்ளது. அமைச்சர் மகேஷ் அந்த பவுண்டேஷனை நடத்துகிறார். கடந்தாண்டு துபாய்க்கு முதல்வர் ஸ்டாலின் சென்றபோது, 1,000 கோடி ரூபாய்க்கு நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
தற்போது அமலாக்க துறை, 'சீல்' வைத்து பவுண்டேஷனையே நிறுத்தி வைத்துள்ளது. நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் ஒப்பந்தம் என்ற பெயரில், 'உங்களுடைய 1,000 கோடி ரூபாயை துபாய் கொண்டு சென்று திரும்ப கொண்டு வரும் திட்டம்' தான் என்றோம். அதற்கு, 'ஆதாரம் இருக்கா?' என்றனர்.
இதோ உள்ளது. அதாவது நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரி, '53/22, கே.ஜி., நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி.நகர் சென்னை!'
உதயநிதி பவுண்டேஷனின் முகவரி '53/22, கே.ஜி., நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி.நகர் சென்னை!'
உதயநிதி பவுண்டேஷனும், நோபல் குழுமத்தின் நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் கதவு எண், முகவரியும் ஒன்றே. இந்த ஆதாரம் போதாதா?
இந்த பவுண்டேஷனில், 2009ல் உதயநிதி தனி இயக்குனராக இருந்தார். இதே முகவரி உள்ள நிறுவன பெயரில், 2022ல் துபாய் சென்று, 1,000 கோடி ரூபாய்க்கு முதல்வர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதுபோல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சொல்லலாம்.
முதல்வர் ஜப்பானில் சொகுசாக இருக்கும் போது, தமிழகத்தில் மதுவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினர் துக்கத்தில் உள்ளனர். இந்த அரசு மீது அனைத்து தரப்பு மக்களும் கோபம் கொண்டுள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில், அதை மக்கள் வெளிப்படுத்துவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை பேச துவங்கியதும் மழை கொட்டியது. இருப்பினும் நனைந்தபடியே தொடர்ந்து பேசினார். நிர்வாகிகள், தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே கூட்டம் முடியும் வரை நின்றிருந்தனர்.