சென்னை : ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், இன்று முதல் உயர் நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கும். புதிய தலைமை நீதிபதிக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை கால நீதிமன்றங்களில், அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜாவும், விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தார். எட்டு மாதங்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து, மே 24ல், அவர் ஓய்வு பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா புர்வாலா நியமிக்கப்பட்டு, மே, 28ல் பதவியேற்றார்.
உயர் நீதிமன்றம் இன்று திறந்ததும், காலை, 10:30 மணிக்கு புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் வரவேற்று பேசுகிறார்.
பார் கவுன்சில் தலைவர் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் வரவேற்று பேசுகின்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், பிற்பகல், 12:15 மணியளவில் முதலாவது கோர்ட் ஹாலில் அமர்ந்து, வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி துவங்குகிறார். அவருடன், நீதிபதி ஆதிகேசவலு அமர்கிறார். பொதுநல வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரிக்கிறது.
புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றதும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக்காக ஒதுக்கப்பட்டிருந்த துறைகளில் மாற்றம் செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மே, 23ல் பொறுப்பேற்ற நீதிபதிகள் சக்திவேல், தனபால், குமரப்பன், ராஜசேகர் ஆகியோர், மூத்த நீதிபதிகளுடன் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு, அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த அப்பீல் வழக்கு மற்றும் அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் தேர்தலை எதிர்த்த வழக்கிலும், இம்மாதம் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியும், நான்கு கூடுதல் நீதிபதிகளும் வந்துள்ளனர்.
மூத்த நீதிபதி வேலுமணி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.