வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால், ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நேற்று கோடை வெயில் தீவிரம் காட்டியது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், திருத்தணி, பாளையங்கோட்டை மற்றும் வேலுாரில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. ஈரோடு, நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருப்பத்துார், திருச்சி, புதுச்சேரியில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. தமிழகம், புதுச்சேரியில், 13 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
![]()
|
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, வேப்பூரில், 9 செ.மீ., மழை பதிவானது. மாநிலம் முழுதும், 25க்கும் மேற்பட்ட இடங்களில், மிதமான மழை பெய்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தாலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்; மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தெற்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.