வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கடலோர பகுதிகளில் பாதாள கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் திட்டத்தை துவக்க, தமிழக அரசிடம் இருந்து சிறப்பு நிதியை, மின்வாரியம் எதிர்பார்க்கிறது.
கனமழை, புயலின்போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், கடலை ஒட்டிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவது தொடர் கதையாகிறது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கடலை ஒட்டிய இடங்களில், பாதாள கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்ய முடிவானது.
அத்திட்டம் முதற்கட்டமாக, நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி; கடலுார் மாவட்டத்தில் கடலுார் நகரில், உலக வங்கி நிதியுதவியுடன், 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
![]()
|
இரு நகரங்களிலும் கேபிள் பதிப்பு பணிகள், 2018ல் துவங்கி, 2022 இறுதியில் முடிந்தன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கடலை ஒட்டிய பகுதிகளில், கேபிளில் மின் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு, 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவை. ஏற்கனவே மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.
எனவே, கடலோர பகுதிகளில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யும் திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
இதுகுறித்து, அரசிடம் வலியுறுத்த உள்ளோம். நிதி உதவிக்கு உத்தரவாதம் கிடைத்ததும், பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரியம், சென்னையில் முக்கிய பகுதிகளில், பாதாள கேபிள்; மற்ற மாவட்டங்களில் மின் கம்பம் மேல் செல்லும் மின்கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்கிறது.