அணு ஆற்றலானது மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுகிறது. அதைக் கொண்டு கலாசார முக்கியத்துவம் மிக்க பழம் பொருட்களைக் காக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
1000 ஆண்டுகள் பழைய ஓவியங்களை, கலைப் பொருட்களைச் சிதையாமல் காப்பது என்பது சுலபமானதல்ல. பல நேரங்களில் அவற்றைக் காப்பதற்காகப் பயன்படும் வேதியியல் பொருட்களே கூட, அவற்றுக்கு லேசான பாதிப்பைத் தரக்கூடும்.
அணு ஆற்றல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக, எகிப்திய பிரமிடுகளில் உள்ள சுவர் ஓவியங்களில் ஏராளமான கிருமிகள் இருந்தன. அணுக்கதிர் வீச்சு கொண்டு கிருமிகள் அழிக்கப்பட்டு, ஓவியங்கள் மீட்கப்பட்டன. சைபீரிய நாட்டில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழைய ராட்சத யானையான 'மெமத்' உடல் கிடைத்தது. அதிலிருந்த ஆபத்தான நுண்ணுயிரிகள், கதிர்வீச்சு கொண்டு அழிக்கப்பட்டன.
கலை உலகில், அணு ஆற்றல் சமீப காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல நேரங்களில் பழைய கலைப் பொருட்களைப் போலவே போலியாக உருவாக்கப்பட்டு, விற்கப்படும் பொருட்களைக் கண்டுபிடிக்கவும் அணு ஆற்றல் பயன்படுகிறது.
உலகம் முழுதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள ஏராளமான கலைப் பொருட்களை, பழம்பெருமை கொண்ட பொருட்களை, இந்த அணுக்கதிர் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்க முடியும்.