நிலக்கரியை எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட சுரங்கங்கள் அவற்றின் பயன்பாடு முடிந்ததும் அப்படியே கைவிடப்பட்டு விடுகின்றன. இவற்றைச் சரியாக மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தவும், சேமிப்பை மேம்படுத்தவும் முடியும். இதற்கான முயற்சியில் சீன நாடு ஈடுபட்டு வருகிறது.
சீனா, கோபி பாலைவனப் பகுதியில் சூரிய, காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் பலவற்றை நிறுவி, ஆண்டுதோறும் போதுமான அளவு மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது.
ஆனால், மின் உற்பத்தி நடைபெறும் கோபி பாலைவனம், மின்சாரம் அதிகம் தேவைப்படும் சீனாவின் கிழக்குப் பகுதியிலிருந்து மிகுந்த தொலைவில் உள்ளது. இதனால், சீன அரசு மின் உற்பத்தி செய்ய, சரியான இடங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், சீன அரசுக்கு, அந்நாட்டின் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கம், கைகொடுத்துள்ளது. சீனாவில் மட்டும் 13 ஆயிரம் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இவற்றை, நீர் மின்சாரம் தயாரிக்கவும், தயாரித்த மின்சாரத்தைச் சேமிக்கவும், முறையாக விநியோகம் செய்யவும் பயன்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
முன்னதாக, சுரங்கங்கள் நவீன கட்டமைப்புகளைத் தாங்கும் உறுதி கொண்டுள்ளனவா என்ற, சோதனையும் நடக்கிறது. சோதனையில் தேறும் சுரங்கங்கள் விரைவில் மின் மையங்களாக மாறும்.