மும்பை: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்பது மார்கன் ஸ்டான்லி அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகளவில் ஒரு இடத்தை பெற்று, ஆசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறி உள்ளது என பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் நமது நாட்டில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்பது மார்கன் ஸ்டான்லி அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இந்தியா மீதும், பாஜ., மீதும் உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் அனைவருக்கும் சமம். மல்யுத்த வீரர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அதனை நாங்கள் நிறைவேற்றுவோம். மல்யுத்த வீரர்கள் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வழிபாடு
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜ., வினர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜ., அரசு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்க மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்துள்ளேன் என அனுராக் தாக்கூர் கூறினார்.