இம்பால்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மெய்டி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து இன்று(ஜூன்1) நிருபர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: கலவரத்தை தொடர்ந்து மணிப்பூரில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். இயல்பு நிலை கொண்டு வருவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். மெய்டி, குகி சமூகத்தினரையும் சந்தித்தேன். கலவரத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும். கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கும். கவர்னர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். ரேசன் பொருட்கள் வழங்க சிறப்பு முகாம்கள் அமைப்போம். பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சொத்துகளை இழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களை திருடிச் சென்றவர்கள், அதனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.