வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பிரசண்டா சந்தித்துப் பேசினார். இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை
சந்தித்தனர். அப்போது, இந்தியா- நேபாளம் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானது என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பிரசண்டா, டில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பிரசண்டா சந்தித்துப் பேசினார். பல்வேறு துறைகளில் இருநாட்டு கூட்டுறவு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, பிரதமர் மோடி, நேபாள பிரதமர் இருவரும் சேர்ந்து இந்தியா- நேபாளம் இடையே சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்தியா மற்றும் நேபாளம் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, பிரதமர் மோடி கூறுகையில்,
எனக்கு நினைவிருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ல், நான் நேபாளத்திற்கு சென்றேன். அப்போது இந்தியா- - நேபாளம் இடையே உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தேன். இன்று நேபாள பிரதமரும் நானும் எதிர்காலத்திற்கு தேவையான பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட கால மின் வர்த்தக ஒப்பந்தம் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நமது நாடுகளின் மின் துறைக்கு பலம் தரும். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான மத மற்றும் கலாச்சார உறவுகள் மிகவும் பழமையானது. மேலும் உறவுகள் அனைத்தும் வலுவானது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அப்போது, நேபாள பிரதமர் கூறுகையில்,
இது நான்காவது முறையாக இந்தியா வந்துள்ளேன். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு பழமையானது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இன்று கலந்துரையாடினோம். நாங்கள் கூட்டாக பல அற்புதமான திட்டங்களைத் துவங்கினோம்.

நேபாளத்திற்கு வருகை தரும்மாறு பிரதமர் மோடிக்கு அன்பான அழைப்பை விடுத்துள்ளேன். நேபாளத்தில் அவரை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். எல்லைப் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நேபாள பிரதமர் கூறினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேபாள பிரதமர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.