வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை, தமிழகம் அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்கு உள்ளாகவே, அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மேகதாது குறித்த முழு விபரத்தை, அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். எனவே, தமிழகத்திற்கு உரிமையுள்ள மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும்,சிவகுமார் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று(ஜூன்01) சிவகுமார் வெளியிட்ட அறிக்கை:
மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். மேதாதுவால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழக மக்கள் மீது கோபமோ, வெறுப்போ இல்லை; அவர்களை சகோதர்களாக பார்க்கிறேன்.மேகதாது திட்டத்தால் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும். பட்ஜெட்டில், 1000 கோடி ரூ.அறிவிக்கப்பட்டது. ஆனால் செலவிடப்படவில்லை. அந்த பணம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தப்படும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.