சென்னை: தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது -என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா பேசியதாவது: சான்றோர்களையும், கலை கலாசார செறிவையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது. தமிழகத்தின் மரபு, கலாசாரங்களை பின்பற்றி உங்களைப்போல் வாழ்வேன். இவ்வாறு அவர் பேசினார்.