வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று(ஜூன் 01) டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் சந்தித்தனர். பிறகு, கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறும்போது, டில்லியில் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும் என்றார்.

டில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதுவரை மத்திய அரசு அவசர சட்டத்திற்கு எதிராக, கெஜ்ரிவால் நேரில் சென்று, மே.வங்க முதல்வர் மம்தா, பீஹார் முதல்வர், உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்து, ஆதரவு திரட்டியுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று(ஜூன் 01) டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் சந்தித்தனர். அப்போது, அவர்களை முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் உடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர்.
பிறகு ஸ்டாலின், கெஜ்ரிவால் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
திமுக ஆதரவு
ஸ்டாலின் கூறியதாவது: டில்லியில் உள்ளது போல் தமிழகத்திலும் மாடல் பள்ளிகளை துவங்க உள்ளோம். டில்லி அரசு, ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ள பா.ஜ., அரசு சுதந்திரமாக செயல்பட விடாமல் பல்வேறு நெருக்கடிகளை தருகிறது. கவர்னர் மூலம் பல்வேறு தொல்லைகளையும் கொடுக்கிறது.
அதிகாரிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற விடாமல் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அவசர சட்டம் உள்ளது. இதனை திமுக நிச்சயம் எதிர்க்கும். அனைத்து மாநில முதல்வர்களும், அகில இந்திய கட்சி தலைவர்களும், அவசர சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
12ம் தேதி பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார். ராகுல் வெளிநாட்டில் உள்ளதால், இக்கூட்டத்தில் காங்கிரசால் கலந்து கொள்ள முடியாது. அன்றைய தினம், மேட்டூர் அணை திறக்கும் நிகழ்ச்சி உள்ளதால், என்னாலும் கலந்து கொள்ள முடியாது. இதனால், தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
தேர்தல் கூட்டணி குறித்தும் பேசி உள்ளோம். அதனை நேரம் வரும்போது தெரிவிப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
ஜனநாயக விரோதம்
கெஜ்ரிவால் கூறியதாவது:8 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு டில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த ஒரே வாரத்தில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் நள்ளிரவில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. பணியாளர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் டில்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதிகாரிகள் , தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தில் இந்த அவசர சட்டம் அறிமுகப்படுத்தப்படும். ராஜ்யசபாவில் அவசர சட்டத்தை எதிர்ப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்தால் ராஜ்யசபாவில் அவசர சட்டம் தோற்கடிக்கப்படும். தமிழக அரசு, டில்லி அரசுக்கும் மக்களுக்கும் ஆதரவாக இருக்கும் என எண்ணுகிறேன். மசோதாவை எதிர்க்க கட்சிகளின் ஆதரவு கோருகிறேன்.
ராகுல், கார்கேயை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். இந்த அவசர சட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியல்சாசனத்திற்கும் விரோதம் என்பதால் அதனை காங்கிரசும் எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு அவசர சட்டத்தை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவு
பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் கூறுகையில், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க.,வின் ஆதரவை நாடி வந்துள்ளோம் என்றார்.