மறைமலை நகர்:சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கங்கரணை, சிட்லப்பாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இந்த மாநகராட்சியில், தினசரி 350 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்துார் ஊராட்சியில், கடந்த 5 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பை கிடங்கில், தாம்பரம் மட்டுமின்றி, பல்வேறு ஊராட்சிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை யும் கொட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக, லாரிகளில் அள்ளி வரப்படும் குப்பை, தாம்பரம் -- ஒரகடம் சாலை, ஒரகடம் -- சிங்கபெருமாள் கோவில் சாலை வழியாக, கொளத்துார் வந்து செல்கின்றன.
இந்த குப்பை லாரிகளில், அதிக அளவில் குப்பை ஏற்றி வருவதோடு, குப்பை மீது தார்ப்பாய் மூடாமல் வருவதால், சாலை முழுதும் குப்பை சிதறுகிறது.
இதனால், லாரிகளின் பின்னே இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பையை கிடங்கில் கொட்டி விட்டு, நெடுஞ்சாலையில் லாரிகளை சுத்தம் செய்வதால், மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
குப்பை கிடங்கு வந்ததில் இருந்து, சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலை முழுதும் குப்பை மற்றும் மண் மேடுகள் அதிகரித்துள்ளன. இதனால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, குப்பை கிடங்கிற்கு வரும் லாரிகள் அனைத்தும், முறையாக தார்ப்பாய் மூடி, குப்பை எடுத்துச் செல்கின்றனவா என, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.