மின் விளக்கின்றி வரதர் ராஜகோபுரம்
பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரதான நுழைவு வழி, கிழக்கு ராஜகோபுரமாக இருந்தது. பின், மேற்கு ராஜகோபுரம் வழி பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால் கிழக்கு ராஜகோபுரம் வழி போக்குவரத்து குறைந்து, தற்போது திறப்பதில்லை. இரவில் கிழக்கு ராஜகோபுரத்தில் மின் விளக்கு எரியவில்லை. தற்போது, பிரம்மோற்சவம் துவங்க உள்ள நிலையில், இருள் சூழ்ந்திருக்கும் கிழக்கு ராஜகோபுரத்தை, மின் விளக்கில் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். பரந்தாமன்,
காஞ்சிபுரம்.
'எம். -சாண்ட்' துாசியால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில், 'எம்.-சாண்ட்' எனப்படும், கல் அரவையை துாளாக்கும், நிலையங்கள் இயங்கி வருகின்றன. டிப்பர் லாரிகளில், காஞ்சிபுரம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, 'எம்.-சாண்ட்' லோடு ஏற்றி அனுப்புகின்றனர்.
டிப்பர் லாரியை மூடுவதில்லை. 'எம்.-சாண்ட்' காற்றில் பறக்காமல் இருக்க தண்ணீரை அடித்து, ஈரமாக்கியும் எடுத்து செல்வதில்லை.
வாலாஜாபாத் - -தாம்பரம் மார்க்கமாக செல்லும் டிப்பர் லாரிகளில் இருந்து உலர்ந்த 'எம்.-சாண்ட்' விழுவதால், வாகன ஓட்டிகளின் கண்களில் துாசு விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த லாரிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சு. நடராஜன்,
வாலாஜாபாத்.