பொதுவாக வெள்ளை குர்தாவில் காணப்படும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராகுல், தற்போது அமெரிக்க பயணத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது தந்தையின் விருப்ப உடையான பந்த்காலாவில் மேடையேறினார். அப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
ராகுல் காந்தி தற்போது 10 நாள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் உள்ளார். மே 30 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் தரையிறங்கியவர் பல்வேறு கூட்டரங்குகளில் பங்கேற்று பேசி வருகிறார். சாம் பிட்ரோடா அவரை வரவேற்றார். அவர் தான் வெளிநாட்டு காங்கிரஸ் அமைப்பை நிர்வகிக்கிறார்.
வழக்கம் போல் அமெரிக்காவிலும் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விமர்சனத்தை ராகுல் முன்னெடுக்கிறார். வாஷிங்டன் மற்றும் நியூயார்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் அவர் முன் வைக்கும் விமர்சனங்களுக்கு இங்கிருந்து பா.ஜ.க., அமைச்சர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை (மே 31) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிலிக்கான் வேலி தொழில்முனைவோர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். அப்போது வழக்கமான வெள்ளை குர்தாவை கைவிட்டு, தனது தந்தையின் ஸ்டைலான கச்சிதமான நீல நிற பந்த்காலா சூட்டில் வந்தார்.
வெளிநாட்டு பயணம் என்றாலே மேற்கத்தி பாணி உடையான கோட் சூட் பழக்கத்தை உடைத்து, அதற்கு மாற்றாக இந்திய முறையான பந்த்காலாவை பிரபலப்படுத்தியவர் ராஜிவ் காந்தி. அதன் மிடுக்கான தோற்றம், ஸ்ட்ரெயிட் கட் அமைப்பு விமான பைலட்டான ராஜிவை கவர்ந்திருந்தது.
பந்த்காலா உடையின் தோற்றம் பற்றி தெளிவு இல்லை. ராஜபுத்திரர்களின் அங்கர்கா கோட்டிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் இதனை மத்திய ஆசிய உடையான சப்கான் மற்றும் பிரிட்டிஷ் பிராக் கோட்டின் தொகுப்பு என்கின்றனர். இன்னும் சிலர் இந்திய பாரம்பரிய நீள உடையான ஜோத்பூரி அக்கனிலிருந்து, அளவு குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, பேண்ட் உடன் சேர்ந்து பந்த்காலாவானது என்பார்கள். பின்னர் 20ம் நூற்றாண்டில் இது ராயல் உடையாக அடையாளம் பெற்றது. வெளிநாட்டில் இந்திய பிரதமர்களின் அடையாளமாக பந்த்காலாவை மாற்றியவர் ராஜிவ் தான்.
ராஜிவ் பிரதமராகி 1985ல் அவர் லண்டனுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணத்தில் கருப்பு, க்ரே, நீல நிறங்களில் பந்த்காலாவில் வலம் வந்தார். பின்னர் அமெரிக்க பயணத்தின் போதும் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகனுடன் பந்த்காலாவில் காணப்பட்டார். ஐ.நா., மன்றத்தில் உரையாற்றிய போது, சீனா சென்ற போது என வெளிநாடுகளில் எல்லாம் அவரது தேர்வாக பந்த்காலா இருந்தது.
அதனை தற்போது அவரது மகன் ராகுலும் தேர்ந்தெடுக்கிறார். உள்நாட்டில் சாதாரணமாக டி-ஷர்ட் ஜீன் அல்லது குர்தாவில் எளிமையாக இருக்கும் ராகுல் ஸ்டான்போர்டில் மிக நேர்த்தியாக பந்த்காலா சூட் அணிந்து பந்தாவாக காணப்பட்டார். கடந்த ஆண்டு லண்டன் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் இதே பந்த்காலாவை தான் தேர்வு செய்திருந்தார். இது அவருக்கு முதிர்ச்சியடைந்த தலைவர் என்ற தோற்றத்தை வழங்க தவறவில்லை.
பொதுவாக வெள்ளை குர்தாவில் காணப்படும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராகுல், தற்போது அமெரிக்க பயணத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது தந்தையின்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->