சாலையோர பள்ளம் சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் கீழம்பி -- செவிலிமேடு புறவழி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கீழம்பி பகுதியில் உள்ள தார்ச்சாலையை ஒட்டி மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்கும்போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, பள்ளம் உள்ள பகுதியில், மண் அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.கண்ணன், காஞ்சிபுரம்.
முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதியில், திருப்பருத்திக்குன்றம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இச்சாலையில், ஆங்காங்கே வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களின் கிளைகள், சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.
இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள், சாலையோரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆடைகளை கிழிப்பதோடு, முகம், கண்களை பதம் பார்க்கும் நிலையில் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையோரம் நீண்டு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.லோகேஷ்பாபு, சின்ன காஞ்சிபுரம்.
சாலை பணியால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் - திருத்தணி இடையே, சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. புதிய சாலை போடும் பணிக்கு, ஜல்லி மற்றும் தார் கலவை கொட்டுகின்றனர்.
சாலையின் ஒரு பாதியில் ஒரு நாள் போடுகின்றனர். மற்றொரு பாதி, நான்கு நாட்கள் கழித்து போடுகின்றனர்.
அந்த நான்கு நாட்களுக்குள் ஏகப்பட்ட வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, புதிதாக போடப்பட்ட பாதி சாலை ஓரத்தில் வாகனங்கள் செல்ல முயலும் போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, வாகன விபத்து ஏற்பட நேரிடுகிறது.
இதை தவிர்க்க, சாலை போடும் பணி சீராக செய்து முடிக்க வேண்டும்.
- -ஆ.கணேசன், காஞ்சிபுரம்.
சுங்கச்சாவடி சாலையில் மழை நீர் தேக்கம்
சென்னை- - -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்கச்சாவடி உள்ளது. இந்த சாலை வழியே தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சுற்றுப்புறத்தில் தொழிற்சாலை அதிகரிப்பால் இந்த சாலையில் ஸ்ரீபெரும்புதுார் அருகே போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால், சுங்கச்சாவடியை கடக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில், சுங்கச்சாவடியில் சென்னை செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையோரம் மழை நீர் வடிகால்வாய் இல்லை.
இதனால், சிறு மழை பெய்தாலே குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், இருசக்கர வாகனங்கள் செல்லும் வழி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், நெரிசல் அதிகரிக்கிறது.
இங்கு வடிகால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
- சி.பிரகாஷ், ஸ்ரீபெரும்புதுார்.
மின் விளக்கின்றி வரதர் ராஜகோபுரம்
பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரதான நுழைவு வழி, கிழக்கு ராஜகோபுரமாக இருந்தது. பின், மேற்கு ராஜகோபுரம் வழி பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால் கிழக்கு ராஜகோபுரம் வழி போக்குவரத்து குறைந்து, தற்போது திறப்பதில்லை. இரவில் கிழக்கு ராஜகோபுரத்தில் மின் விளக்கு எரியவில்லை.
தற்போது, பிரம்மோற்சவம் துவங்கி உள்ள நிலையில், இருள் சூழ்ந்திருக்கும் கிழக்கு ராஜகோபுரத்தை, மின் விளக்கில் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். பரந்தாமன், காஞ்சிபுரம்.
'எம் - -சாண்ட்' துாசியால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில், 'எம் - -சாண்ட்' எனப்படும், கல் அரவையை துாளாக்கும், நிலையங்கள் இயங்கி வருகின்றன.
டிப்பர் லாரிகளில், காஞ்சிபுரம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, 'எம் -- சாண்ட்' லோடு ஏற்றி அனுப்புகின்றனர்.
டிப்பர் லாரியை மூடுவதில்லை. 'எம்.-சாண்ட்' காற்றில் பறக்காமல் இருக்க தண்ணீரை அடித்து, ஈரமாக்கியும் எடுத்து செல்வதில்லை.
வாலாஜாபாத் - -தாம்பரம் மார்க்கமாக செல்லும் டிப்பர் லாரிகளில் இருந்து உலர்ந்த 'எம் - சாண்ட்' விழுவதால், வாகன ஓட்டிகளின் கண்களில் துாசு விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த லாரிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சு. நடராஜன், வாலாஜாபாத்.