வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
முஜாபர்நகர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜனாதிபதியை சந்தித்து முறையிட, விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுஉள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது, மல்யுத்த வீராங்கனையர் சிலர் பாலியல் புகார் கூறியுள்ளனர்.
பா.ஜ., - எம்.பி.,யாகவும் உள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மல்யுத்த வீரர்கள், வீராங்கனையர், ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
|
இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில், 'காப் மஹாபஞ்சாயத்' எனப்படும் சமூகக் குழுவின் ஆலோசனை கூட்டம், உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகரில் நேற்று நடந்தது.
இதில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. காப் மஹாபஞ்சாயத் இன்றும் நடக்க உள்ளது.
இளைஞர் நலம், விளையாட்டு துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு கூட்டம், பா.ஜ.,வைச் சேர்ந்த விவேக் தாக்குர் தலைமையில் புதுடில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், 'மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து இதில் விவாதிக்க வேண்டும்' என, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், அதிக் குமார் மால் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.