தமிழகம் - கர்நாடகா இடையேயான மேகதாது அணை விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசு, அணை கட்டுவதில் தீவிரம் காட்டுவதால், தி.மு.க., அரசுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பத் துவங்கிவிட்டன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், நாமக்கல், கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி உள்ளது.
கர்நாடகாவின் கனகபுராவில் காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், 9,000 கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசு திட்டமிட்டது. இந்த அணையில், 67.16 டி.எம்.சி., நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளை கட்டி, 115 டி.எம்.சி., நீரை கர்நாடகா சேமித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் பாயும் காவிரியில் நீரோட்டம் குறைந்து, பாலைவனமாக மாறி விடும் என்பதால், தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
அணை கட்டுமானத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு, கர்நாடக அரசால் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகளுக்காக, கடந்த பா.ஜ., ஆட்சியில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேகதாது அணை கட்டுவதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகளும், தமிழக அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக அரசின் துணை முதல்வர் சிவகுமார், இரண்டு நாட்களுக்கு முன், நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் பேசுகையில், 'மேகதாது திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 1,000 கோடி ரூபாய் நிதியை, நிலம் கையகப்படுத்துவதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
'ஏன் செய்யவில்லை? பணம் ஒதுக்கி இருப்பது எதற்காக? இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அமல்படுத்த வேண்டும்' என்றார்.
அவரது பேச்சு, தமிழகத்தில் இவ்விவகாரத்தை மீண்டும் கிளப்பி உள்ளது.
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், கர்நாடாகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த, பல்வேறு விவசாய அமைப்புகள், டெல்டா மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.
மேகதாது விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து, சென்னை திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர், இவ்விவகாரத்தில் முதல்வரை முட்டி மோதி வருகின்றனர்.
அதனால், கர்நாடகாவுக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் இறங்குவது குறித்து, நீர்வளத் துறை, காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை நடத்த, முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கோரி காங்., பேரணி நடத்திய பின், மாநில பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; அது செலவிடப்படவில்லை. தமிழகத்தை வெறுத்து, போர் புரியும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அங்கு இருப்பவர்கள் நம் சகோதர, சகோதரியர். எங்களுக்கு யார் மீதும் வெறுப்போ, பொறாமையோ கிடையாது. மேகதாது அணை கட்டுவது எங்கள் திட்டம். கடலுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, காவிரி பாசன பகுதி மக்கள் பயன்படுத்த வசதி செய்து தரப்படும். காவிரி ஆற்றில் உள்ள அணைகளின் சாவி, மத்திய அரசின் கையில் உள்ளது.எப்போது, எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்து, திறந்து விடுவர். கர்நாடகாவில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதால், தமிழகத்துக்கு என்ன பிரச்னை? தண்ணீரை சேமித்து குடிநீர் வினியோகம் செய்யலாம் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் எந்த பிரச்னையும் இல்லை. தமிழர்கள் பரந்த மனதுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு பரந்த மனம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 2018 நவம்பர் 22ல், மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இந்த அனுமதியை திரும்ப பெறக் கோரி, 2018 நவம்பர் 30ல் உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 2018 டிசம்பர் 5ம் தேதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அணையின் திட்ட அறிக்கையை, மத்திய நீர்வளத் துறை நிராகரிக்க வலியுறுத்தி, 2021 ஆகஸ்ட் 27ல் கூடுதல் ஆவணங்களுடன், மற்றொரு மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்புகள் குறித்து விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க தடை கேட்டும், 2022 ஜூன் 7ல், இரண்டு மனுக்களை, தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
- நமது நிருபர் குழு -