விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலர், குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புதுப்பட்டு அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் என்கிற நாகராஜ். இவரது மனைவி துர்காதேவி,37; கீழ்புதுப்பட்டு ஒன்றிய கவுன்சிலர். இவர், நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, தங்கைகள் ரேணுகா,28; சித்ரா,26; தாய் தேவி,60; மற்றும் மூன்று மகன்களுடன் வந்தார்.
அலுவலக வாயில் முன் அமர்ந்த துர்காதேவி, தன் மீதும், உடன் வந்த குடும்பத்தினர் அனைவர் மீதும் டீசலை ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து, தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் துர்காதேவி கூறியதாவது:
கடந்த உள்ளாட்சி தேர்தலில் நான் வெற்றி பெற்றதால், தோல்வி அடைந்தவர்கள் எங்கள் மீது முன் விரோதம் கொண்டுள்ளனர்.
கடந்த 30ம் தேதி, விமல்ராஜ் என்பவர், பொம்மையார் பாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எங்களுக்கு எதிராக தேர்தலில் தோற்றவர்கள், வதந்தி பரப்பியதால், கோட்டகுப்பம் போலீசார், எனது கணவரை அந்த கொலையில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இது மனித உரிமை மீறல். இந்த வழக்கிலிருந்து எனது கணவரை விடுவிக்க வேண்டும். ஆளும் கட்சியின் கவுன்சிலராக இருந்தும், பொய் வழக்கில் என் கணவரை சேர்த்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து எஸ்.பி., மற்றும் கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறிய போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.