புதிய பார்லி., யில் இரு தளங்களில் பிரதமர் அலுவலகம், சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தனி அலுவலகம், அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனி அறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள், அதிகாரிகளின் மேற்பார்வையில் தயாராகி வருகின்றன.
தற்போது, பழைய பார்லி.,யில் இரு அறைகளில் தான், பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இதன் உயர் அதிகாரிகள் செயல்பட போதுமான இடவசதி இல்லை. ஒரு சிறிய அறையில் தான் பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு படை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 28ல் புதிய பார்லி., கட்டடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, இங்கு அலுவலகங்கள் மற்றும் அறைகள் ஒதுக்கும் பணிகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். இதன்படி, இரு தளங்களில் பிரதமர் அலுலகம் அமைய உள்ளது.
![]()
|
இதன் அருகிலேயே பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும், சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தனி அலுவலகம் அமையஉள்ளது. மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகளுடன் கூடிய அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன.
பழைய பார்லி.,யில் அமைச்சர்களுக்கு என மொத்தம் 30 அறைகள் மட்டுமே இருந்த நிலையில், புதிய கட்டடத்தில் கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் 77 பேருக்கும் தனி அறைகள் ஒதுக்கப்படவுள்ளன.
தவிர, பழைய கட்டடத்தில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும், புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டாமென்றும், கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில், மிக முக்கிய அலுவலகங்களை மட்டும், புதிய கட்டடத்திற்கு கொண்டு செல்வது என்றும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதன்படி, எம்.பி.,க்களின் அன்றாட அலுவல்கள், ஆவணக் குறிப்புகளை கையாளும் 'டேபிள் ஆபீஸ்' எனப்படும் அலுவலகம், புதிய கட்டடத்திற்கு போகிறது.
சபையில் அறிமுகமாகும் மற்றும் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் பற்றிய விபரங்களை கையாளும் 'லெஜிஸ்லேஷன் பிராஞ்ச்' அலுவலகமும் புதிய பார்லி.,க்கு மாற்றப்படவுள்ளது.
இதே போல், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களால் சமர்ப்பிக்கப்படும் நோட்டீஸ்களை கையாளும் 'நோட்டீஸ் ஆபீஸ்' சபை நடவடிக்கைகளை குறிப்பெடுக்கும் 'பார்லி., ரிப்போர்ட்டர்ஸ் பிராஞ்ச்' ஆகியவையும் புதிய கட்டடத்திற்கு மாறவுள்ளன.
மற்றபடி, பழைய பார்லி.,யின் மேல் மாடிகள், பார்லி., அனெக்ஸ் ஆகியவற்றில் இயங்கும் அலுவலங்கள், நுாலக அலுவலகம் ஆகியவை இங்கேயே செயல்பட அதிகாரிகள் முடிவெடுத்துஉள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -