புதுச்சேரி: மருத்துவ கல்லுாரி அங்கீகார விகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமின்றி செயல்படுவதாக கவர்னர் தமிழிசை கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழுக்கு, முக்கியத்துவம் தந்த பிறகே சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டோம். இதை மத்திய அரசிடம் கூறியுள்ளோம். சி.பி.எஸ்.இ.,யில் எப்பொழுதும் தமிழ் இருக்கும். புதுச்சேரி கல்வி புரட்சியை பார்க்க உள்ளது. உலக அரங்கில் சிறந்த கல்வியை பெற்று மிகப்பெரிய பலனை குழந்தைகள் பெறப் போகின்றனர்.
மத்திய அரசு கட்டுப்பாட்டுகளை தளர்த்தி கொடுத்ததால், புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., கொண்டு வந்துள்ளோம். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழும், மாகியில் மலையாளம், ஏனாமில் தெலுங்கு இருக்கும்.
மருத்துவக் கல்லுாரி அங்கீகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறுவது தவறு. நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், அரசு மருத்துவக் கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகி உள்ளது. மத்திய அரசு பாரபட்சமின்றி செயல்படுகிறது. மத்திய அரசின் துறைகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. வருகை பதிவேடு டாக்டர்களுக்கு முக்கியம். டாக்டர்கள் சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.